Wednesday, September 8, 2010

யாரைத்தான் நம்புவதோ?

அவன் ஒரு பின்னடைந்த கிராமத்தைச் சேர்ந்தவன். சுமாராகப் படித்தாலும் அரசு கொடுத்த ஊக்குவிப்பினாலும் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய மானியத்தாலும் அருகிலுள்ள சிறு நகரில் ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தான். தற்போதுள்ள வழக்கத்தின்படியே அவன் படித்த துறையையோ அவன் பெற்ற விழுக்காட்டையோ கணக்கில் கொள்ளாமல் அவனுக்கு வேலை தர ஒரு மென்பொருள் நிறுவனம் முன்வந்தது. ஊர்மக்களைப் பிரிந்து வேலைக்கு செல்வது அவன் மனதிற்கு பிடிக்கவில்லையெனினும் அவர்கள் கொடுக்கும் சம்பளம் தன்னுடைய கிராமத்தின் GDPயை விட அதிகம் என்பதால் அரைமனதோடு அலுவலகம் செல்ல ஆயத்தமானான். ஊர் மக்களும் மகிழ்ச்சியோடு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினர்.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தாலும் வெறும் தமிழையும் ஒரு அரைகுறை ஆங்கிலத்தையும் வைத்துக் கொண்டு வெளியூரில் எங்ஙனம் குப்பை கொட்டப்போகிறோம் என்று உள்ளுக்குள் பயந்தான். வேலையிடமான பெங்களுருவில் எல்லா மொழிகளையும் பேசுவார்களென அவன் நண்பர்கள் அவனைத் தேற்றியிருந்தனர். அவர்களும் அவனைவிட சற்று நன்றாக ஆங்கிலம் பேசினாலும் கிட்டத்தட்ட அரைகுறைதான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். போகிற இடத்தில் சிறப்பு வராவிடினும் பரவாயில்லை; செருப்பு வராமல் இருந்தால் சரி, என்பது போன்ற எண்ணங்களோடு பட்டணத்திற்கு வந்து சேர்ந்தான்.

சிறு நகரங்களின் அமைதியிலும் இயற்கையிலும் வளர்ந்த அவனுக்கு அந்த பரபரப்பு வியப்பாக இருந்தது. சரணம் தப்பினால் மரணம் என்ற கணக்கில் வண்டிகள் வேகவேகமாக சாலைகளில் பறந்து கொண்டிருந்தன. எங்கு திரும்பினாலும் மக்கள் அவசரமாக நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் ஒரு பதற்றமும் நேரம் தவறி விடுவோமோ என்ற கவலையும் நீக்கமறப் பரவியிருந்தது. சில வாரங்கள் கழிந்தால் நகரம் பழகிவிடும் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அலுவலகப்பணியில் தனது முழு கவனத்தையும் செலுத்தலானான்.

இரு வாரங்கள் ஓடின. அந்த சனியன்று ஊரைக் கொஞ்சம் சுற்றிப் பார்க்க வேண்டுமென திட்டம் போட்டான். பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் கற்ற திருமால் பாடல்கள் மட்டுமே பரிச்சயமான அவனுக்கு, தன் சக ஊழியர்கள் அனுதினம் பேசிக்கொள்ளும் மால்கள் ஆச்சர்யமாகத் தோன்றின. உணவு, கைப்பேசி, ஆடைகள், பொழுதுபோக்கு, சினிமா என எதைப்பற்றி அவன் வினா எழுப்பினாலும் ஒரு மாலின் பெயரைக் குறிப்பிடுவர், அவன் புது நண்பர்கள். எனவே அவன் வீட்டின் அருகில் இருந்த ஒரு மாலுக்குப் பயணப்பட்டான்.

உயர்ந்து நிமிர்ந்து காணப்பட்ட அந்த மால் என்ற அடுக்குமாடி கட்டிடத்தைக் கண்ட அவன் ஆடித்தான் போனான். தன் ஊர் மக்கள் தங்குமிடம் கூட இவ்வளவு வசதியாய் இல்லாதபோது, நகர மக்கள் களிப்பிடத்திற்கே எத்துனை ஆடம்பரத்தை விழைகிறார்கள்! அவன் கண்களை நவநாகரிக உடைகள் அணிந்திருந்த பெண்கள் குளிர வைத்தார்கள். ஆடவரோடு சகஜமாக கை கோர்த்தும், தோளில் சாய்ந்த படியும் பெண்கள் அங்கு உலா வந்தார்கள். அவனும் அப்பெண்களின் கழுத்தையும் காலையும் உற்று உற்று நோக்கினான். அவன் நினைத்தாற்போல் அவர்கள் டி-ஷர்ட்டிலிருந்து தாலி எட்டிப்பார்க்கவும் இல்லை. கால்களில் மெட்டியும் இல்லை. ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை, என்ற அவன் தலைவர் பாடலை முணுமுணுத்துக்கொண்டு நடந்தான். விலையைப் பற்றி ஏற்கனவே அவன் அலுவலக நண்பர்கள் அவனை எச்சரித்து இருந்ததால் அதற்கு தயாராகவே வந்திருந்தான். அவர்கள் கூறிய ஒரு பிராண்டின் பெயரை நினைவுகூர்ந்து அதைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினான்.

தன்னருகில் நின்று கொண்டிருந்த மூன்று இளம்பெண்களிடம் கேட்டான். மேடம், வேர் இஸ் போப் ஜீன்ஸ் ஷாப்?, என்றதைத் தமிழ்த் தோய்ந்த குரலில் கேட்டு, நிம்மதி பெருமூச்சை விட்டு, பிறகு பதிலுக்காகக் காத்திருந்தான். அவனைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் ஒருத்தி நடையைக் கட்டினாள். மீதம் இருவரோ குப்பென்று சிரித்துவிட்டனர். ஸீம்ஸ் அ கண்ட்ரிப்ரூட் யா, என அவன் காதில்பட்டவாறு சொல்லிவிட்டு நகர்ந்தனர். அவமானத்தால் தலைகுனிந்து போன அவனுக்கு வேகமாய் வீட்டுக்கு ஓடி, போர்வையால் தன் முகத்தை மூடிவிட வேண்டுமென்ற எண்ணம் மேலேறியது. ஆயினும், ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும் என்ற அவன் அப்பத்தாவின் சொற்கள் காதில் வேதவாக்காய் விழுந்தன. மேற்கொண்டு தேடலானான். சிறிது நேரத்திலேயே கடையைக் கண்டுபிடித்தான். மற்றவரிடம் பேசுவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளவேண்டுமென்று மனதில் எண்ணியவாறு அக்கடையில் புற்றீசல் போல பெருகிக்கிடந்த துணிகளை நோட்டமிடத் தொடங்கினான்.

அவன் சாதாரணமானவன்தான்; ஆயினும் இக்கதையின் நாயகன் ஆயிற்றே! நாயகர்கள் வாழ்வில் விதி எப்போது விளையாடாமல் இருந்தது? விதி அந்தப் பெண்கள் ரூபத்தில் வந்தது. அவர்களும் இதே கடையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் ஒருத்தி நமுட்டு சிரிப்போடு வெளியேறினாள். மீதி இருவரில் ஒருத்தியும் மற்றொருத்திக்கு பை சொல்லிவிட்டு நீங்கினாள். கடையை மலைத்துப் பார்த்தபடியே பாவமாகச் சுற்றி வந்த நம் நாயகனைப் பார்த்துப் பாவப்பட்டாள் நாயகி. மலையளவு துணிகளோடு ஒரு தள்ளுவண்டியை ஓட்டியபடியும் *** ஆட்டியபடியும் நடந்து வந்து அவனிடம் நெருங்கி பேச்சு கொடுக்கத் தலைப்பட்டாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ சார், நீங்க தமிழா?

(மனதில் நினைத்தது வளையத்தினுள்...) (வாடிங்கு... பொம்பள பஜாரி...) ஆமாம் மேடம், எப்படி கண்டுபிடிச்சீங்க?

(எல்லாம் உங்க கலர் தான்) சும்மா தான் சார்... பாக்க அப்டி தோணிச்சு...

“ஓஹோ...

“நாங்க சிரிச்சதுக்கு ஸாரி... நீங்க தப்பா கேட்டீங்க... அது போப் ஜீன்ஸ் இல்ல... பெ-பே ஜீன்ஸ்...

“ஓ...”, என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவன் திரும்பி பெயர்ப்பலகையைப் பார்த்தான். தன் தவறை உணர்ந்தான். பட்டணத்தில் இது மாபெரும் தவறாயிற்றே!

“ஸாரி மேடம்... நான் புதுசு... இழுத்தான் அவன்.

“பரவால்ல சார்... நானும் ஊருக்கு வந்தபோது ஒண்ணுமே தெரியாமதான் இருந்தேன். எல்லாம் பழகிடும்...”, ஆறுதலாகச் சொன்னாள்.

தமிழ் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது அவனுக்கு. பொங்கத் தொடங்கினான். அது என்ன பட்டணக் கலாச்சாரமோ மேடம்... எனக்கு எதுவும் பிடிபடல... மல்லிப்பூவையும் தாவணியையும் பாக்க கண்ணு துடிக்குது...

சிரித்துக் கொண்டே அவளும் சொன்னாள். கலாச்சாரம் அப்டீங்கறதே நம்ம உருவாக்கினது தானே சார்...

“அதெல்லாம் சரி மேடம்... நீங்க இப்டி உங்க ஊர்ல திரிஞ்சிருப்பீங்களா?

“கண்டிப்பா இல்ல... அண்ணன் வகிந்திருவான்... ஆனா இந்த ஊர்ல இப்டி வரலனா நான் மட்டும் தனியா தெரிவேன்... சக ஊழியர்களும் கிண்டல் பண்ணுவாங்க...”, இழுத்தாள் அவள்.

“என்ன மேடம்... singh எங்க போனாலும் turban கட்டிக்கிறது இல்லியா? franceலேயே முஸ்லிம் பெண்கள் பர்தா அணியறாங்க... இந்த ஊர்ல மட்டும் தான் ஆம்பள-பொம்பள வித்தியாசம் கூட இல்லாம போச்சு... பெண்கள் தான் கலாச்சாரத்தோட அடித்தளமே... அத மாத்த முடியாது மேடம்...

“சார்... சார்... கொஞ்சம் பொறுங்க... நானும் கலாச்சாரத்த மறந்தவ இல்ல... do you know? I am a bharathnatyam expert… I learnt it from my mom… அவங்களும் talented dancer!

அதுவரை அவளிடம் ஏதோ வித்தியாசத்தைக் கண்ட அவன், அவள் கண்களும் வாயோடு சேர்ந்து கொண்டு பேசுவதை உணர்ந்தான்.

“டிசம்பரானா சென்னைல நெறைய கச்சேரி பண்றேன்... ஒரு மாசம் ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு... இது கலாச்சாரத்த காப்பத்தறது இல்லியா? பண்டிகை, திருவிழானா ஊருக்கு ஓடிப்போய் எல்லாரோட விமர்சையா கொண்டாடுவேன்... மனசுக்குள்ள எப்போவுமே தமிழ்ப்பொண்ணு தான் நான்...

“சூப்பர் மேடம்... உங்க dressஅ பாத்து உங்கள தவறா நெனச்சிட்டேன்...

“அது பரவால்ல சார்... ஆனா என்ன பொறுத்தவர comfortகு அப்புறம் தான் cultureஎங்க வசதியும் முக்கியம் இல்லியா?

“ஆமாம்... ஆமாம் மேடம்... கண்டிப்பா...

I wouldn’t forget my moorings… நம்ம ஊரு, ஜாதி, மக்கள், பாரம்பரியம் எதையுமே மறக்கக் கூடாது... ஆனா ஊரோட ஒத்தும் வாழனும்... அதுனால தான் இப்டி...”, தன் கருத்தைக் கூறி முடித்தாள்.

அவள் சொன்னதில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்ட அவன், அவள் உதவியோடு சில துணிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். இருவரும் ஒன்றாக மாலின் வெளியே வர, அவள் parking lotக்குத் தலைப்பட்டாள். அவனிடம் இடத்தை விசாரிக்க, அவளின் வழியில் இருப்பதால் தானே கொண்டு சேர்த்துவிடுவதாகக் கூறினாள். இரவு நேரமாகி விட்டதால், அவனும் வேண்டாவெறுப்பாகச் சம்மதித்தான்.

******************************************************************************

மறுநாள் காலை எட்டு மணிக்கு அவள் படுக்கையறைக்கு வந்து அவள் இன்னும் தூங்கி கொண்டிருப்பதைக் கண்ட அவள் அம்மா, போர்வையை விலக்கினாள். அவள் கண்ட காட்சி அவளை சற்றே தூக்கிப்போட்டது. வாயிலேயே வயலின் வாசிக்கலானாள்.

அடியே... காலங்காலத்துல கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு... இப்டியாடி அசிங்கமா திரிவ...

என்னம்மா... Just lemme sleep for sometime…

நிறுத்துடி உன் இங்கிலிபீஸ... அது எந்த நாட்டு கலாச்சாரம்டி கிழிஞ்ச துணியோட உலா வர்ற சொல்லுது... கேவலமா இருக்கு... குடும்ப மானமே போகுது...

என்னம்மா... I don’t have torn jeans… mostly என் hubbyகிட்ட அத first giftஆ கேக்க போறேன்! கொஞ்சலாக சொன்னாள் அவள்.

சி... வாய மூடு... *** தெரியற மாதிரி கிழிஞ்ச துணி போடறது தான் fashion?

What? அதிர்ச்சியுடன் கேட்ட அவள் தன் மெல்லிய கைகளைப் பின்புறம் தடவினாள். கரடு-முரடான ஜீன்ஸ் துணியின் நடுவே பாக்கெட்டின் பகுதியில் மென்மை தட்டுப்பட்டது...

Shit… I was fooled by a rustic mom… அந்த ஏமாற்றத்திலும் ஆங்கிலம் சரளமாக வந்தது அவளுக்கு... அடுத்த அரைமணி நேரத்திற்கு மகளின் தேம்பலை தேற்றுவதாய் இருந்தாள் அவள் தாய்.

******************************************************************************

சில தெருக்கள் தள்ளியோ, அவன் தன் தாயுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“ஆத்தா... நேத்து நம்ம வேலைய புது ஊர்ல காட்டிடோம்ல...

“என்ன கண்ணு பண்ண...

“நம்ம ஊரு தொழில் தாம்மா...

“அடியாத்தி... களவா! வேண்டாம் ராசா... பெரிய ஊர்ல மாட்டிக்கப் போற...

“அதெல்லாம் இல்லத்தா... அந்த பொண்ணோட சம்மதத்தோட தான்தா... மூவாயிரம் தேறிச்சு..."

தொகையைக் கேட்டு வியந்தாள் அத்தாய். அடியாத்தி, அம்புட்டா! பெரிய பெரிய படிப்பு படிச்சாலும் நம்ம சன தொழில மறக்காம செய்ற ராஸா... எனக்கு பெருமையா இருக்கு...

“ஆத்தா... நம்ம பசங்கள இங்க வரச்சொல்லுத்தா... பொண்ணுங்க பசங்க எல்லாம் pantஓட தான் திரியராளுக... 1000-ரூவா நோட்டு இல்லாம யாருமே இருக்க மாட்டாங்க... நல்லா ஏவாரம் பண்ணலாம்...

“சரி அப்பு... பத்திரமா பாத்துக்க...”, என்றபடி அழைப்பைத் துண்டித்தாள் அவன் தாய்.

என்னதான் சமுதாயத்தில் கல்வித் தரமும் தொழில் வகைகளும் பெருகினாலும் குலவிச்சை கல்லாமல் பாகம்படத் தானே செய்யும்!

******************************************************************************

No comments: